த.சத்தியநாராயணன், அயன்புரம்
கடற்கரைகளுக்கான நீலக்கொடி அந்தஸ்து என்பது என்ன?
சுற்றுலா பயணிகள் வருகைதரும் கடற்கரைகளில், அனைத்துவிதமான வசதிகளையும் கொண்ட கடற்கரைகளுக்கு நீலக்கொடி அந்தஸ்து வழங்கப்படுகிறது. கடற்கரை குப்பையின்றி சுகாதாரமாக பரமாரிக்கப்படுவது, பயணிகள் படுத்து ஓய்வெடுக்க வசதி, குழந்தைகள் விளையாடுவதற்கான சூழல், நல்ல குடிநீர் வசதி, அமர நாற்காலிகள் என பல்வேறு வசதிகளைக் கொண்ட கடற்கரைகளுக்கு இந்த அந்தஸ்து வழங்கப்படும். இந்தியாவில் எட்டு கடற்கரைகள் இந்தச் சான்றிதழைப் பெற்றுள்ளன. உலகின் இரண்டாவது பெரிய கடற்கரை எனப் போற்றப்படும் மெரினாவோ, தமிழகத்திலுள்ள வேறெந்த கடற்கரைகளோ இதுவரை இந்த அந்தஸ்தைப் பெறவில்லை. தமிழ்நாட்டில் கோவளம் உள்ளிட்ட கடற்கரைகளை மனதில்கொண்டு நீலக்கொடி அந்தஸ்து பெறுவதற்கான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டுவருகிறது.
அன்னூரார், பொன்விழி
ஐ.நா. சபை என்ன தான் செய்துகொண்டி ருக்கிறது?
பாலஸ்தீன விஷயத்தை மன தில்கொண்டுதானே இதைக் கேட்டிருக்கிறீர்கள்? உண்மையி லேயே தொடக்கம் முதலே ஐ.நா., காஸா பகுதியில் தாக்குதலை எதிர்ப்பதுடன் காஸா, மேற்குக் கடற்கரை பகுதிக்கு தண்ணீர், மின்சாரம், உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்க வலியுறுத்திவருகிறது. இஸ்ரேல் போரை நிறுத்தவேண்டுமென தொடர்ந்து குரல்கொடுக்கிறது. அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் ஐ.நா.வின் கோரிக்கைகளை மதிக்காமல் இருப்பதற்கு எதிர்வினையாக, தனது மனசாட்சி உறுத்தலைப் பொறுக்கமுடியாமல் ஐ.நா. மனித உரிமை அமைப்பின் இயக்குநர் கிரேக் மொகிபர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஐ.நா.விடம் இருக்கும் நிதி, படைபலம் எல்லாமே அதன் வலிமையான உறுப்பு நாடுகள் அளிப்பவை என்பதால், ஓரளவுக்குமேல் அதனால் எந்த விஷயத்தையும் வலியுறுத்த முடியாது.
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
இ.பி.எஸ். கைகாட்டும் நபர்தான் பிரதமர் அல்லது அவரே பிரதமர் என்று ராஜேந்திரபாலாஜி பேசியிருக்கிறாரே?
இ.பி.எஸ். கைகாட்டும் நபர் பிரதமராக வேண்டுமென்றால், மத்தியில் ஒரு கட்சி பெரும்பான்மைக்கு நெருக்கமாக ஜெயித்து வரவேண்டும். அதேநேரம் அ.தி.மு.க. தமிழகத்திலுள்ள நாற்பதில் பெரும்பாலான இடங்களை வென்று, அ.தி.மு.க.வின் ஆதரவிருந்தால் மட்டுமே ஆட்சியமைக்க முடியுமென்ற சூழல் நிலவ வேண்டும். இ.பி.எஸ்.ஸே பிரதமராக வேண்டுமென்பது இன்னும் சிக்கலான விஷயம். நாளைய முதல்வரே என்று தமிழகமெங்கும் போஸ்டர் அடிக்கப்படும் நபர்களைக் கணக்கிட்டால், கிட்டத்தட்ட நானூறு பேராவது தேறுவார்கள். ராஜேந்திரபாலாஜி, போஸ்டர் அடிக்காமல் மேடையில் நாளைய பிரதமரே! என பேசியிருக்கிறார். அவ்வளவுதான் விஷயம்.
ஜெ. மணிகண்டன், பேரணாம்பட்டு
காதல் தோல்விலி தேர்தல் தோல்வி ஒப்பிடவும்?
ஒரு காதல் தோற்றால் மறு காதல் இருக்கிறது. ஒரு தேர்தலில் தோற்றால் மறுமுறை போட்டியிடவேண்டியதுதான். இரண்டிலும் வெல்ல நம்பிக்கைதான் அவசியம். இரண்டிலும் சம்பந்தப்பட்டவர் களுக்கு ஆதாயம் அனுபவக் கொள்முதல். நட்டம், அதையே நினைத்துப் புழுங்குவதால், மனதில் விழும் வடு.
பி. இந்திராணி, முகப்பேர்.
ஏன் ஆன்மிகத்துக்கும் அறிவியலுக்கும் ஏழாம் பொருத்த மாகவே இருக்கிறது?
இருக்காதா பின்னே! ஒரு காலத்தில் ஆன்மிகம்தான் உலகின் மையமாக இருந்தது. மதம் என்ன சொன்னதோ அதுதான் அறிவியலாக இருந்தது. சூரியன் பூமியைச் சுற்றுவதாக அன்று நம்பப்பட்டுவந்தது. கலிலியோ வந்தார், பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது எனச் சொன்னார். அன்றைய மதவாதிகள் அவரை வாழ்நாள் முழுவதுமே வீட்டுச் சிறையில் அடைத்ததோடு, சூரியனே பூமியைச் சுற்றுவதாக வற்புறுத்தி சொல்லவைத் தனர். பிதாகரஸ் தனது கணக்கியல் கருத்துக்களுக்காக நாடு கடத்தப்பட்டார். மைக்கேல் செர்வெட்டஸ், ஸ்பானிஷ் மருத்துவர், நுரையீரல் சம்பந்தமான சில மருத்துவக் கண்டுபிடிப்புகளை கண்டறிந்தவர். கிறித்துவத்தில் சீர்திருத்தம் பற்றிப் பேசியதற்காக, இவர் தனது புத்தகங்களோடு மதவாதிகளால் உயிரோடு எரிக்கப்பட்டார். பின் ஒரு காலம் வந்தது. அறிவியல்வாதி களின் கை ஓங்கியது. மதம் சற்றே செல்வாக்குக் குறைந்தது. ஆனாலும், இன்னும் அடிப்படைவாத நாடுகளில் மதவாதிகளின் கை ஓங்கித்தான் இருக்கிறது. ஒரு நாட்டில் அறிவியல் வாதிகளின் சொல் செல்லுபடியாகாமல், மதவாதிகளின் சொல் செல்லுபடியாகிற தென்றால் அந்த நாடு அடிப்படைவாதத்தை நோக்கி நகர்கிறது என்று அர்த்தம்.